“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை ” – திருக்குறள்
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த்தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
அழகான காலைப்பொழுது, மேகம் சூழ்ந்த வானம் முகம் காட்ட, சுட்டெரிக்கும் சூரியன், புன்னகையோடு மலரட்டும், இந்த விழா நாள் !
மூத்த குடியாய், தமிழாய் ,உயிராய்ப் பிறந்து தரணியில் தலை நிமிர்ந்து நிற்பது என் தாய் மொழி. என் தாய்மொழி தமிழை வணங்கி, என்னைப்பெற்றெடுத்த தாய்க்கும், என்னைப் பெற்றெடுத்த தமிழ் மண்ணுக்கும் முதல் வணக்கம் எனக் கூறி இறைவணக்கத்துடன் பொங்கல் விழா தொடங்கப் பெற்றது. பின்பு மாணவர்கள் திருக்குறள், செய்திகள் , பொங்கலின் நான்கு விழாநாட்களின் சிறப்பு பற்றியும் , தொடக்கநிலை மாணவர்கள் ,கிராமியப் பாடலுக்கும் மற்றும் கும்மி பாட்டுக்கும் நடனமாடி, மாணவர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்வித்தார்கள்.
உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன் மற்றும் உடல் நெகிழ்தன்மை அனைத்துப் பயன்களையும் கொடுக்கும் சிலம்பாட்டம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டுச் சின்னமாகவும் கலாச்சாரப் புதையலாகவும் விளங்கும் சிலம்பாட்டத்தை நம் பள்ளி உயர்நிலை மாணவன் இரண்டு நிமிடம் ஆடியதை ஆர்வத்துடன் கண்டு களித்தோம் . தொடக்கநிலை மற்றும் உயர்நிலை மாணவர்கள் நாடகவழியாக உழவுத்தொழிலின் சிறப்பைப் பற்றியும், பொங்கல் விழாவின் சிறப்பை நகைச்சுவை மிகுந்த நாடகமாக நடித்துக் காட்டினார்கள். வேளாண்மையின் சிறப்பையும் பற்றித் தெரிந்து கொள்ளப் பதினோராம் வகுப்பு மாணவர்கள் நடவுப் பாடலைப்பாடி ஆசிரியர்களையும் மாணவர்களையும் மகிழ்வித்தார்கள்.
வீரம் ,மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, அறிவுத்திறன் ,விடாமுயற்சி ,சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கும் முறையில், நம் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் ஆம் வகுப்பு வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒன்றாம் வகுப்பிற்கு இசை நாற்காலி விளையாட்டு, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பிற்குக் கற்களை அடுக்குதல் போட்டியும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு தேக்கரண்டியில் எலுமிச்சைப்பழம் வைத்து ஓடுதல் போட்டியும், ஆறு மற்றும் ஏழாம் வகுப்பிற்கு , மாணவர்கள் தன் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு, தன் வாயில் உள்ள பலூனை வைத்து ஊதி காகிதக் கோப்பைகளை ஒவ்வொன்றாக அடுக்கும் விளையாட்டுப் போட்டியும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கைகளில் தண்ணீரைக் கொண்டு கண்ணாடி குடுவையில் நிரப்பும் போட்டியும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நீளமான சணல்பையில் தன் கால்களை உள்ளே விட்டு குதித்து குதித்து செல்லும் விளையாட்டுப் போட்டியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டத்தை உயரமாகப் பறக்க விடும் போட்டியும், பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கண்ணில் துணியைக் கட்டிக்கொண்டு கையில் குச்சியை வைத்துக்கொண்டு உறியடித்தல் போட்டியும் நடைபெற்றன.
நம் பள்ளியில் வைத்த சர்க்கரைப் பொங்கலை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். பின்பு ஆசிரியர்களுக்கு உறியடித்தல் போட்டியும், கண்ணாடிக்குடுவையில் தண்ணீரை நிரப்புதல் போட்டியும் நடைபெற்றன. இறுதியாக, பள்ளி முதல்வர் அவர்கள், மாணவச்செல்வங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் கூறியதுடன், பொங்கல் விழா இனிதே நிறைவுற்றது.