“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”. – திருக்குறள் 411
கல்வியே மனித வாழ்வின் உயர்ந்த செல்வம் என்பதை உணர்த்தும் வகையில், காமராஜரது பிறந்த நாளான ஜூலை15, கல்வி வளர்ச்சி நாளாக ஒவ்வொரு வருடமும் சி.பி.எஸ் குளோபல் பள்ளியில் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அதைத் தொடர்ந்து இவ்வருடம் 2026, ஜூலை 14, தேதி அன்று, கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளி இறைவணக்க கூட்டத்தில் ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். இறைவணக்கத்தைத் தொடர்ந்து மாணவர்கள் திருக்குறளையும் அதன் விளக்கத்தையும் தெளிவாக எடுத்துரைத்தனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இன்றைய செய்திகளை மாணவர்கள் வாசித்தனர், மேலும் இன்றைய நாளின் சிறப்பை எடுத்துரைத்து, கல்விக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜரின் அரிய சேவைகளை ஐந்தாம் வகுப்பு மாணவி பிரத்திக்ஷா நினைவூட்டினார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி, பெருந்தலைவர் காமராஜரின் எளிமை, கல்விப்பணி மற்றும் நாட்டுப்பற்றை எடுத்துரைக்கும் அழகிய கவிதையை உணர்வுபூர்வமாக ஒப்புவித்தார். அவரது தெளிவான உச்சரிப்பும் சிறந்த வெளிப்பாடும் அனைவரின் பாராட்டைப் பெற்றது. நான்காம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற காமராஜரைப் பற்றிய வினா–விடை நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாணவர்கள் உற்சாகமாகவும் சிறப்பாகவும் பதிலளித்து தங்களின் அறிவுத் திறனை வெளிப்படுத்தினர்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பெருந்தலைவர் காமராஜரைப் போற்றும் இனிய பாடலை இசைத்து, விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, “காமராஜர் ஏன் ‘கிங் மேக்கர்’ என்று அழைக்கப்படுகிறார்?” என்ற தலைப்பில் காணொளி மாணவர்களுக்குத் திரையிடப்பட்டது. அந்தக் காணொளி மூலம் காமராஜரின் எளிமை, நேர்மை, தலைமைத்துவம் மற்றும் நாட்டிற்காக அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகள் குறித்து மாணவர்கள் பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டனர். கல்வியின் அவசியத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பெருந்தலைவர் காமராஜரின் சேவைகளை நினைவுகூரும் இந்நிகழ்ச்சி, மாணவர்களின் மனதில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியது.
இறுதியாக, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, காமராஜர் தின விழா இனிதே நிறைவுற்றது.





